முன்னாள் புலி உறுப்பினர்கள் தாக்குதலுக்கு தயாராகின்றனர் – மறுத்தது இலங்கை

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடாத்துவதற்கு தயாராகி வருவதாக இந்திய ஊடகம் த ஹிந்து இந்தியாவின் புலனாய்வு துறையின் தகவல்களை அடிப்படையாக வைத்து செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியினை இலங்கை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. அவ்வாறான எந்தவித புலனாய்வு தகவல்களும் தமக்கு கிடைக்கவில்லையென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

த ஹிந்து வெளியிட்டுள்ள இந்த செய்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக மிகவும் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பாக பாரளுமன்ற உறுப்பினர்கள் இந்த செய்திக்கு தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனரர்.

இவ்வாறான செய்தி இலங்கையில் ஏற்பட்டும் வரும் நல்லிணக்கத்தை சிதைக்கும் செயற்பாடாக அமையுமெனவும் தெரிவிக்கபப்டுகிறது.

“எந்த அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது என இந்தியா மற்றும் ஹிந்து பொறுப்பாளர்கள் கூற வேண்டும் எனவும், இது இந்தியா புலனாய்வா அல்லது சர்வதேச பபுலனாய்வா என வெளிப்படுத்த வேண்டுமெனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் M.A சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். அடிப்படையின்றி வெளியிடப்பட்டுள்ள இந்த செய்திக்கு என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்படுமென சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அண்மைக்காலமாக உடனுக்குடன் பதில் வழங்கும் இந்திய உயர் இஸ்தானிகராலயம் இந்த விடயத்தில் எந்த பதிலையும் இதுவரை வெளியிடவில்லை.

இலங்கையின் அண்மைக்கால பிரச்சினைகள் தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்திகளை மிகைப்படுத்தி, இல்லாத செய்திகளை வெளியிட்டு வருகின்றமையினை அவதானிக்க முடிகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version