மே 18 நினைவேந்தல் நாளாக பிரகடனம் – டெலோ பாராட்டு

கனடா பாராளுமன்றம் கடந்த 19ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ம் திகதியை இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நாளாக ஏகமனதாக அங்கீகரித்துள்ளதனை தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) வரவேற்றுள்ளது.

உலகத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ம் திகதிக்கு அங்கீகாரம் வழங்கிய முதல் நாடாக கனடா அமைந்துள்ளது. இதை நாம் வரவேற்கிறோம். இந்த முயற்சிக்கு பின்னணியில் இருந்த புலம்பெயர் உறவுகளுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பிரேரணையை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கரி ஆனந்தசங்கரி பாராளுமன்றில் சமர்ப்பித்த வேளை ஏகமனதாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழிய குற்றங்களுக்கான நீதிக்கான போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தின் முதற் படியாக இதை நாம் கருதுகிறோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் மற்றும் அட்டூழிய குற்றங்களுக்காக நீதியைக் கோரி பல வருடங்களாக எமது இனம் போராடி வருகிறது. கனடியப் பாராளுமன்றத்தின் இந்த அங்கீகாரம் எமது முயற்சிக்கு நம்பிக்கை தருவதோடு ஊக்கமளிப்பதாகவும் அமைந்திருக்கிறது.

இது போன்று ஏனைய நாடுகளில் வாழும் புலம்பெயர் உறவுகளும் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கான சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை ஒருமித்து முன்னெடுக்க வேண்டும் என கோரி நிற்கிறோம்” என தமிழீழ விடுதலை இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 18 நினைவேந்தல் நாளாக பிரகடனம் - டெலோ பாராட்டு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version