இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி தொடரின் ஏற்பாடுகளில் சிக்கல் நிலைகள் ஏற்படலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. எரிபொருள் தட்டுப்பாடே இதற்கான காரணமாக அமைகிறது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் தங்களது கவனத்தை செலுத்தியுள்ள போதும், போதியளவிலான மன திருப்தியடையாத நிலையிலும் காண்பபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி அவுஸ்திரேலிய அணி இலங்கை வருமென கிரிக்கெட் அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் பகல் இரவு போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. கொழும்பு R.பிரேமதாச மைதானம், மற்றும் கண்டி பல்லேகல மைதானங்கள் டீசலில் இயங்கும் மின்பிறப்பாக்கிகள் மூலமே இயங்குகின்றன. டீசல் தட்டுப்பாடு காரணமாக அவற்றை இயக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக பகலிரவு போட்டிகள், பகல் போட்டிகளாக மாற்றப்பட்டதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் அதனை மறுத்துள்ளனர்.
கொழும்பு மற்றும் கண்டி போட்டிகளுக்காக இரண்டு தடவைகள் பயணம் செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது. அவை மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் காணப்படுகின்ற போதும் இன்னமும் அவை தொடர்பில் யோசிக்கவில்லை எனவும், அவ்வாறு மாற்றங்கள் செய்தால் தங்குமிடம் மற்றும் வேறு சில ஏற்பாடுகளில் சிக்கல்கள் உருவாகுமென இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை, அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் நாட்டின் பொருளாதார சிக்கலான நிலையில் நடைபெறுவது இலங்கைக்கு பலன்களை வழங்கும். வெளிநாட்டு நிறுவனங்களது பணம் இலங்கை வருவதற்கும், போட்டிகளுக்காக வரும் வீரர்கள் மூலமும், அவுஸ்திரேலியா கிரிக்கெட் மூலமும், அவுஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்கள் இலங்கைக்கு வந்தால் அவர்கள் மூலம் கிடைக்கும் வருமானமும் இலங்கையின் தற்போதைய சூழலில் மிக முக்கியமானது. அத்தோடு ஒளிபரப்பு நிறுவனத்தின் மூலமும் பாரிய தொகை இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
