ஜனனநாயக கட்டமைப்பிற்குள் தேசிய நெருக்கடிக்கு தீர்வு – ஜானதிபதி

இலங்கையில் புதிய பிரதமரும் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முன்னோக்கிச் செல்லும் பாதையில் தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோவில் இன்று (26.05) நடைபெற்ற, ஆசியாவின் எதிர்காலம் (Nikkei) தொடர்பான 27ஆவது சர்வதேச மாநாட்டில் காணொளித் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் நிக்கேய் (Nikkei) செய்தித்தாள் 1995 முதல் ஆண்டுதோறும் மாநாட்டை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டின் கருப்பொருள் ‘பிளவுபட்ட உலகில் ஆசியாவின் பங்கு மீள் அர்த்தப்படுத்தல்’ என்பதாகும்.

இலங்கை ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடாகும். தற்போதைய தேசிய நெருக்கடிக்கான தீர்வுகளை அதே ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி தனதுரையில் சுட்டிக் காட்டினார்.

“கொவிட்-19 நோய்த் தொற்றினால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தமை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து பணம் அனுப்புவதில் ஏற்பட்ட வீழ்ச்சி, கடுமையான நிதி நெருக்கடி மற்றும் இலங்கையின் அதிக கடன் சுமையுடன் இணைந்த ஏனைய நிகழ்வுகளினால் பணவீக்கம் ஏற்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடன் பொருத்தமான வேலைத்திட்டத்திற்கான அணுகுமுறைக்கிணங்க, எமது கடன் வழங்குனர்களுடன் கலந்தாலோசித்து, வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்கும் அபிப்பிராயத்துடன், இலங்கை ஏப்ரல் மாதத்தில் “கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்திவைத்தல்” தொடர்பான அறிவித்தலொன்றை விடுத்தது.

எவ்வாறாயினும், அத்தகைய தீர்வுகள் மூலம் செயற்படும்போது அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் விநியோகம் மற்றும் எரிபொருள் இறக்குமதி போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் ஒத்துழைப்பு இலங்கைக்கு உடனடியாகத் தேவைப்படுகிறது” என்பதனை ஜனாதிபதி மேலும் தெளிவுபடுத்தினார்.

“ஜப்பான் இலங்கையின் முக்கிய அபிவிருத்தி பங்காளியாகும். ஜப்பானில் இருந்து நிதியுதவி வழங்குவது தொடர்பாக நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் விரைவில் முடிவடையும் என நம்பப்படுகிறது. பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவளிக்கும்” என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிடடார்.

இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு சாத்தியமான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து நட்பு நாடுகளிடமும் கேட்டுக்கொண்டார்.

இலங்கை எதிர்கொள்ளும் கடுமையான சிரமங்கள், கொவிட்-19 தொற்றுநோயின் நீண்டகால விளைவுகளின் முன்னறிவிப்பாகும். ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள மோதலால் இது தீவிரமடைந்துள்ளது. பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு இந்த இக்கட்டான காலங்களில் இவ்வாறான பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு உதவுவது அவசியமானது என ஜனாதிபதி மேலும் தனதுரையில் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான பரந்த சிக்கலை உலகம் சந்திக்கும். எதிர்கால உணவுப் பற்றாக்குறை மற்றும் அடுத்த சில மாதங்களில் உணவுப் பொருட்களின் விலைகளில் உயர்வு பல நாடுகளில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தும்.

எனவே, இந்த முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் உள்நாட்டு விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் வரவிருக்கும் நெருக்கடியை எதிர்கொள்வதில் நமது நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவது அவசியம். இந்த பிரச்சினைகளை வெற்றிகொள்வதை உறுதி செய்வதற்கு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டில் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கல்விமான்கள் கலந்துகொண்டு பிராந்திய பிரச்சினைகள் மற்றும் உலகில் ஆசியாவின் பங்கு பற்றிய இலவச ஆலோசனைகளை மாநாட்டில் முன்வைத்தார்கள்.

மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப், கம்போடிய பிரதமர் ஹன் சென், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா, லாவோஸ் ஜனாதிபதி தோங்லுன் சிசோலித், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய வெளியுறவு அமைச்சர் திரு.சுப்பிரமணியம் ஜெய்சங்கர், மலேசியாவின் முன்னால் பிரதமர் மஹதீர் மொஹமட் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னால் பிரதமர் கெவிட் ரன் ஆகியோரும் கல்விமான்கள் மற்றும் நிபுணர்களும் இம் மாநாட்டில் உரையாற்றினர்.

ஜனனநாயக கட்டமைப்பிற்குள் தேசிய நெருக்கடிக்கு தீர்வு - ஜானதிபதி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version