நாளுக்கு நாள் நாடு அதல பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக சர்வதேச தர வரிசைப்படுத்தல் நிறுவகங்களிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் இந்த விடயத்தை கருத்திற் கொள்ளாத கும்பலாலயே நாடு இன்று கடும் பேரழிவிற்குள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
தன்னிச்சையான தனிநபர் சர்வாதிகாரம் மற்றும் அதற்கு சார்பான கும்பலால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் முடிவுகளாலயே நாட்டிற்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31.05) இடம் பெற்ற அரச நிர்வாக சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவுடனான சந்திப்பில் சஜித் பிரேமதாச இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
தனி நபர்களை இலக்காக் கொண்டு அரசியலமைப்புத் திருத்தங்கள் மேற்கொள்ளக்கூடாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறைமைக்கு ஏற்ப வேலைத்திட்டத்தை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியினது நோக்கம் எனவும் நடைபெற்ற சந்திப்பில் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி 21 ஆவது திருத்தத்திற்கு எதிரானது என சில வங்குரோத்து குழுக்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், 21 ஆவது திருத்ததை நாட்டிற்கு அறிமுகப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தி அதை என்ன காரணத்திற்காக எதிர்க்க வேண்டும் எனவும் சஜித் கேள்வி எழுப்பினார்.
