குருநாகல் மற்றும் களுத்துறை ஆகிய இடங்களிலுள் அமைந்துள்ள மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றில் தயாரிக்கப்பட்ட பெருந்தொகையான மதுபானங்கள் மக்கள் பாவனைக்கேற்ற தரத்தில் இல்லையெனவும், தரம் பரிசோதனை செய்து அனுமதி வழங்கப்பட முன்னரே விற்பனைக்கு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அரச பகுப்பாய்வாளர் திணைக்கள உத்தரவின் பிரகாரம் அவை மீளப் பெறப்பட்டுள்ளதாகவும் டெய்லி மிரர் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் மிக முக்கிய அரசியல்வாதிக்கு சொந்தமான நிறுவனம் இதுவெனவும், அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் தர சான்றிதழ் இன்றி இவ்வாறு குறித்த மதுபான உற்பத்திகள் சந்தைக்கு அனுப்பப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக் கணக்குகளுக்கான குழு (COPA) கடந்த வாரம் மதுபானங்களுக்கான தரநிலைகள் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்பிக்குமாறு மதுவரி திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ள அதேவேளை, மதுபான உற்பத்தி நிறுவனங்கள் சந்தையினை கைப்பற்ற வேறுபட்ட திறன்களில் மதுபான உற்பத்திகளை செய்வதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மதுபான நிறுவனத்தின் இரண்டு வகை பெரும் தொகையான மதுபான உற்பத்திகள் இவ்வாறு தர சான்றிதழ்களின்றி சந்தைக்கு விநியோகம் செய்யப்பட்டதாகவும், அவற்றில் முகத்துக்கு பாவிக்கும் சவர வாசனை திரவியம்(After Shave), கை தொற்றை நீக்கும் திரவியம் (Hand Sanitizer) போன்றவற்றுக்கு பாவிக்கும் தோற்று நீக்கி ஸ்பிரிட் வகை இந்த மதுபானங்களில் காணபப்டுவதாகவும் அரச பகுப்பாய்வு திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகிக்கப்பட்டுள்ள மதுபான தயாரிப்புகள் யாவும் மீள பெறப்பட்டுள்ளதாகவும், அவை அழிக்கப்படாமல் தொழிற்சாலைக்கு மீள பெறப்பட்டது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக மதுவரி திணைக்களம் கூறியுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த நிறுவன உரிமையாளரின் தலையீட்டினால் உரிய விசாரணை நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
