“நாட்டில் உணவு நெருக்கடி பற்றி பேசுகிறீர்கள். உணவுப்பஞ்சம் பற்றி பேசுகிறீர்கள். உணவு பயிரிடுவது பற்றி பேசுகிறீர்கள். அதற்காக பன்சலைகளில், பாடசாலைகளில், வீடுகளில் உள்ள காணிகளில் உணவு பயிரிட்டு தோட்டம் செய்வது பற்றி பேசுகிறீர்கள். மலையக தோட்டங்களில் பயன் படுத்தப்படாமல் இருக்கும் வெற்று காணிகளில் உணவு, கிழங்கு பயிரிட தோட்ட தொழிலாளருக்கு அனுமதி வழங்குவது பற்றி பேச மாட்டீர்களா? என இன்று (07.06) பாராளுமன்றத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாரளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது உரையில் கேள்வியெழுப்பினார்.
அவருடைய கேள்விக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் பதிலளித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய மனோ கணேசன், “இது பற்றி நான் பிரதமருக்கு கடந்த வாரமே கடிதம் எழுதினேன். இந்நாட்டில் மிகவும் பின்தங்கிய மக்களாக, இன்று ஒருநாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு உண்ணும் நிலைமையில் வாழும் தோட்ட மக்களை பற்றி உங்களுக்கு கரிசனை இல்லையா? அவர்களுக்கு பயிரிட காணிகள் வழங்கி, உதவினால் அவர்கள் உணவுப்பயிர்களை பயிரிட்டு, தங்களுக்கும் உணவை பெற்றுகொண்டு, நாட்டுக்கும் வழங்குவார்களே?” என தனது உரையில் மேலும் இன்னுமொரு கேள்வியையும் முன் வைத்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரின் இந்த கேள்விக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் உடனடியாக எழுந்து பதில் கூறினார்கள்.
“தோட்டப்புற வெற்று காணிகளில் பயிரிட தொழிலாளருக்கு வாய்ப்பு வழங்குவோம். உங்கள் ஆலோசனை கடிதம் கிடைத்தது. விவசாய அமைச்சருக்கு இதுபற்றி கூறியுள்ளேன். ‘மனோ கணேசன் திட்டம்’ என்று பெயரிட்டே இதை செய்வோம். கவலை வேண்டாம். இது தொடர்பான கலந்துரையாடல்களில் நீங்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் கூறினார்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர “இதுபற்றி நேற்று நடந்த கலந்துரையாடலின் போதுகூட, பிரதமர் என்னிடம் கூறினார். எம்பி மனோ கணேசனின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள் என்றார். இதை நாம் செய்வோம். இதுபற்றிய கலந்துரையாடலை உடன் நடத்துவோம். உங்களை அதில் கலந்துக்கொள்ள அழைக்கிறேன்.” என்று பதிலளிக்கையில் கூறினார்.