வவுனியாவில் பல் பொருள் அங்காடி நிலையங்கள் இன்று (சுப்பர் மார்க்கட்கள்) திறக்கப்பட்டுள்ளன. பொருட்கள் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன. இது தொடரபாக வவுனியா வர்த்தகர் சங்கத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது மீண்டும் திறக்க அனுமதியோ அறிவித்தல்களோ கிடைக்கவில்லை.
ஆனால் வவுனியா நகர கார்கில்ஸ் பூட் சிட்டி திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுகிறது. அதனை நாங்கள் உறுதி செய்துள்ளோம். ஆகவே நாங்களும் திறந்து வியாபாரத்தில் ஈடுபடுகிறோம். ஆனால் திறக்குமாறு நாங்கள் யாருக்கும் அறிவுறுத்தல் வழங்கவில்லை என தெரிவித்தனர்.
வவுனியா நகர கார்கில்ஸ் பூட் சிட்டி முகாமையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தாங்கள் பலசரக்கு பொருட்களை வியாபாரம் செய்யவில்லை எனவும், மருந்து பொருட்களுக்கு வருபவர்களுக்கு பால் மா வகைகளை தாங்களாகவே எடுத்து வழங்குவதாகவும், மதுபானம் வாங்கு வருபவர்களுக்கு குளிர்பானங்களும், முறுக்கு, மிக்ஸர் போன்ற சிற்றுண்டி வகைகளையும் தாங்களே எடுத்து வழங்குவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் வவுனியா நகர கார்கில்ஸ் பூட் சிட்டியில் மக்கள் தாமாகவே பொருட்களை தேடி எடுத்தமைக்கான ஆதாரமும், பொருட்கள் விற்கப்பட்டதற்கான பற்று சீட்டுகளும் எமது ஊடகத்துக்கு கிடைத்துள்ளது. அவர்களுக்கு அனுமதி வழங்கியது யார்? அல்லது அனுமதியின்றியே அவர்கள் விற்பனைகளில் ஈடுபடுகின்றனரா?
ஏற்கனவே வவுனியா நகர் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவுள்ளன.இந்த நிலையில் இவ்வாறான கடைகளும் திறக்கப்பட்டு வருகின்றமை தொற்றை அதிகரிக்கும் செயற்பாடே.
வவுனியா நகர மத்தியில் நடைபெறும் இந்த செயற்பாடுகள் உரிய அதிகாரிகளுக்கு தெரிவதில்லையா? ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர் என்பதும் கேள்விக்குறியே.
வவுனியாவில் மட்டுமல்லாமல் இலங்கையின் பல பகுதிகளிலும் கடைகளில் வியாபாரம் நடைபெறுவதாக அறிய முடிகிறது. இவ்வாறான நிலையில் அரசாங்கமும் இதனை பாரா முகமாக உள்ளது என்றே நம்ப முடிகிறது.
தங்கள் தங்கள் பாதுகாப்பை தாங்களே பாதுகாத்து கொள்ளவேண்டும். கடைகளுக்கு செல்பவர்களும், வெளியே செல்பவர்களும் உரிய பாதுகாப்பின்நிமிர்த்தம் செயற்படுங்கள்.