-அகல்யா டேவிட்-
தொழிற்படையின் ஆற்றல்கள் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவுமிக்க மனிதவளத்தை வலுவூட்டுகின்ற அடிப்படையில், உலகளாவிய மட்டத்திலான தொழிற்படையை இலங்கையில் உருவாக்கும் நோக்கில் தொழில் வழிகாட்டல் வாரத்தை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்திட்டத்திற்கமைவாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் தேசிய தொழில் வழிகாட்டல் வாரம் ஒன்றினை எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் இதன் நிகழ்வுகளை கொரொனா நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நிகழ்நிலை(online) மூலமாக சிறப்பாக நடாத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகாரன் குறிப்பிட்டுள்ளார்.
இதையொட்டி பாடசாலை மாணவர்கள், அத்தோடு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான போட்டி நிகழ்வுகள் நிகழ்நிலை (ஒன்லைன்) மூலம் நடாத்தப்படவுள்ளது. மேலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகளுக்கான உளவியல் பரிசோதனனயும் வழங்கப்பட உள்ளது.
இதுதவிர தொழில் தேடுகின்ற இளைஞர, யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பிரபல்யமான தனியார் நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் “மாவட்ட மட்டத்தில் தொழில் சந்தை” நிகழ்வும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி நிகழ்நிலையாக (ஒன்லைன் மூலம்) நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இவ்வாறான வழிகாட்டல்கள் மற்றும் ஊக்குவிப்புக்கள் வழங்கப்படுவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் பாராட்டப்படக்கூடியன.