இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று சிறப்பான மீள் வருகையினை வெளிக்காட்டியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் இலங்கை அணி துடுப்பாடி நிறைவு செய்யும் வேளையில் மழை பெய்தமையினால் போட்டி நிறுத்தப்பட்டது. டக் வேர்த்து லூயிஸ் முறைப்படி 43 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டது.
இலங்கை அணி 47.4 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் குஷல் மென்டிஸ் 36 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களையும், தஸூன் சாணக்க 34 ஓட்டங்களையும், டுனித் வெல்லாலகே 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பட் கம்மின்ஸ் 4 விக்கெட்களையும், கிளன் மக்ஸ்வெல், மத்தியூ குணேமான் ஆகியோர் தலா 02 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
43 ஓவர்களில் 216 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 37.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றது. இதில் டேவிட் வோர்னர் 37 ஓட்டங்களையும், கிளன் மக்ஸ்வெல் 30 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 28 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி சார்பாக சாமிக்க கருணாரட்ன 3 விக்கெட்களையும், டுனித் வெல்லலாகே, தனஞ்சய டி சில்வா, டுஸ்மந்த சமீர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
போட்டியின் நாயகனாக சாமிக்க கருணாரட்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். 5 போட்டிகளடங்கிய தொடர் 1-1 என சமநிலை பெற்றுள்ளது.
