21 ஆம் திருத்த சட்டம் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை தராது. வயிறுகளை நிரப்ப போவதில்லை. எரிபொருள், சமையல் எரிவாயு பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஆனால் சர்வதேசம் எதிர்பார்க்கும் ஜனநாயக ரீதியான அரசியல் மாற்றம் இடம்பெற்றுள்ளது என்ற நம்பிக்கையினை வழங்கலாம் என நீதி மற்றும், சட்ட தீர்திருத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியமும் அதனையே எதிர்பார்க்கிறது. எந்த விடயங்களுக்கும் சம்மதம் தெரிவிப்பதற்கு முதலில், இந்த சட்டம் திருத்தப்டுவதனை அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆகவே இந்த சட்ட திருத்தம் மிகவும் அவசியமானது என அவர் மேலும் கூறியுள்ளார்.
திங்கட்கிழமை அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்ட 21 ஆம் திருத்த சட்டம் 19 ஆம் திருத்த சட்டத்துக்கு ஒப்பானதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள 21 A சட்ட திருத்தங்கள் பொதுசன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுமெனவும், தற்போது அமுலுக்கு வரவுள்ள சட்ட திருத்தம் அவ்வாறானதல்ல எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
