தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் ஐக்கிய நாடுகள் சபைக்கு பல முக்கிய இரகசிய தகவல்களை வழங்கியுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக டெய்லி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த ஒருவர் தனக்கு பல் விடயங்கள் தெரியும் என்பதனையும், அந்த தகவல்களின் சாராம்சத்தை வெளிநாட்டு தூதரகங்களுக்கு கடிதம் மூலமாக அறிவித்ததனை தொடர்ந்து அவர் வெளிநாடு ஒன்றுக்கு சென்று தஞ்சம் புகுந்துள்ளார் எனவும் மேலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு ஐந்து நாட்களாக அவர் வாக்கு மூலம் வழங்கியதாகவும், இறந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசெப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், ஆகியோரது கொலைகள் தொடர்பிலும், காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எஹலியகொட பற்றிய முக்கிய தகவல்களையும் வெளியிட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்ட கொலை சம்பவங்கள் தொடர்பில் அவர் தகவல்களை வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களை வழங்கியுள்ள குறித்த நபர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான தகவல்களையும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கியுள்ளதாக டெய்லி மிரர் மேலும் தெரிவித்துள்ளது.