தமிழக மீன் பிடி படகுகள் நேற்று(29.06) முல்லைத்தீவு கடல் பகுயில் மீன்பிடியில் ஈடுபடுவதனை முல்லைத்தீவு மீனவர்கள் அவதானித்துள்ளனர். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன், ஊடகவியலாளர்கள், மீனவ பிரதிநிதிகள் படகு ஒன்றில் சென்று தமிழக மீனவர்களிடம் முன்வைத்த கோரிக்கையின் பின்னர் அவர்கள் அந்த இடத்திலிருந்து திரும்பி சென்றுள்ளனர். நேற்று 20 படகுகளுக்கும் மேலாக மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில காலமாக இந்தியா இழுவை படகுகளின் ஆக்கிரமிப்பு குறைவாக இருந்த நிலையில், சட்டவிரோத தொழில்களினால் பாரிய துன்பப்பட்டு கொண்டிருந்த நிலைமையில் முல்லைதீவு மீனவர்கள் எரிபொருள் இன்மை காரணமாகவும் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து தொழிலுக்கு செல்ல முடியாத இக்கட்டான நிலைமையை எதிர்கொண்டிருந்தனர்.
“பல்வேறு நெருக்கடிகளால் தங்களுடைய தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்திய, தமிழக இழுவை படகுகள் மீண்டும் முல்லைத்தீவு கடற்பரப்பில் வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளமை தமக்கு இன்னும் பாரிய துன்பத்தை தந்துள்ளதாக” முல்லைத்தீவு மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு மத்தியில் 30 வருட யுத்தத்தில் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்த மக்கள் தற்போது மீண்டும் தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்
குறிப்பாக மீனவர்களைப் பொறுத்தளவில் மண்ணெண்ணெய் இல்லாமையால் தொழிலுக்கு செல்ல முடியாத நிலைமையில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து நாளாந்த உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வருகின்ற நிலைமையில் தென்னிலங்கை மீனவர்களுடைய வருகை அதனை விடவும் இந்த முல்லைத்தீவு கடலிலே செய்யப்படுகின்ற சட்டவிரோதமாக குறிப்பாக சுருக்கு வலை தொழில் லைட்கோஸ் டைனமட் போன்ற சட்டவிரோத தொழில்களால் மிக பெரிய அளவிலே பாதிப்புகளை எதிர்கொண்டு வந்த நிலைமையில் இன்று இந்திய இழுவைப்படகுகளும் மீண்டும் வருகை தந்திருக்கின்றன. முல்லைத்தீவு மீனவர்களின் மத்தியில் இந்த விடயங்கள் கடும் மனவுளைச்சலை ஏற்ப்படுத்தியுள்ளன.
ஊடகவியலாளர்களை அழைத்து சென்ற படகில் வந்த மீனவர்கள் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் குறித்த இந்திய இழுவைப் படகுகளில் வந்தவர்களை “எங்களுக்கு உதவி செய்வதாக கூறிக்கொண்டு நீங்கள் இவ்வாறான நிலைமையில் தொழிலை செய்து எங்களுடைய வாழ்வாதாரத்தையும் அழித்தால் நாங்கள் எப்படி வாழ்வது” என்பதையும் எனவே “எங்களுடைய கடற் பகுதிக்கு வந்து தொழில் செய்ய வேண்டாம்” என்பதையும் குறித்த இந்திய மீனவர்களுக்கு தெரிவித்து இருந்தனர்.
அதற்கு இந்திய மீனவர்கள் அந்த கருத்துக்களை ஏற்றுக் கொண்டு தாங்கள் இனி இங்கு வரவில்லை என்று தெரிவித்து அங்கிருந்து சென்றத0தை அவதானிக்க கூடியதாக இருந்தது
எது எவ்வாறாக இருப்பினும் சட்டவிரோத தொழில்கள் மற்றும் இவ்வாறான இந்திய இழுவைப்படகுகள் அச்சுறுத்தல்கள் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரம் முற்றுமுழுதாக பாதிப்படைந்து இருப்பதாகவும் இன்னும் ஒரு தடவை இந்த இந்திய இழுவைப்படகுகள் முல்லைத்தீவு கடற்கரை நோக்கி வருமாக இருந்தால் அந்த படகை கரைக்கு தாங்களாகவே கொண்டு வருவோம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த படகுகள் வருகை தந்த விடயம் தொடர்பில் கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் ,கடற்படை, அரசாங்க அதிபர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்