வவுனியாவில் அவசர அம்புலன்ஸ் சேவையான 1990 சேவைக்கு எரிபொருள் இல்லாத நிலையில், வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்துக்கு அருகாமையில் உள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விற்பனை நிலையத்தில் டீசல் வழங்கப்படவுள்ள நிலையில், சுமார் 1 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் டீசல் நிரப்புவதற்காக அம்புலன்ஸ் வண்டிகள் வரிசையில் நிற்கின்றன.
வார நாட்களில் இலங்கை, போக்குவரத்து சபையில் எரிபொருள் நிரப்படுகின்ற போதும், பணி பகிஷ்கரிப்பு, வார இறுதி நாட்கள் என்ற காரணங்களினால் இந்த அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருள் நிரப்ப முடியாமல் போயுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் வாகன போக்குவரத்து இல்லாமல் போயுள்ள நிலையில், அவசர நோயாளிகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல இந்த அம்புலன்ஸ் வண்டிகளே அதிகமாக பாவிக்கப்படுகின்றன. அதன் காரணமாக அதிகமாக எரிபொருள் தேவைப்படுவதாகவும் அறிய முடிகிறது.
அத்தியாவசிய தேவைக்கான அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருள் நிரப்ப மக்கள் நல்லெண்ண அடிப்படையில் வாய்ப்பு வழங்க வேண்டும். மக்கள் அவ்வாறு செயற்படாமல் அம்புலன்ஸ் வண்டிகளை இவ்வாறு காக்க வைத்திருப்பது அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.