இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா அணி ஜஸ்பிரிட் பும்ராவின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் மிகப் பெரிய வெற்றி ஒன்றினை பெற்றுக் கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 25.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 110 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜோஸ் பட்லர் 30(32) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 6 விக்கெட்களையும், மொஹமட் ஷமி 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். பும்ராவின் முதலாவது 6 விக்கெட் பந்து வீச்சு பெறுதி. இரண்டாவது தடவையாக ஐந்து விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ஓட்டங்களை பெற்றது. இதில் ரோஹித் ஷர்மா 76(58) ஓட்டங்களையும், ஷிகர் தவான் 31(54) ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்தியா அணி 10 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியின் நாயகனாக ஜஸ்பிரிட் பும்ரா தெரிவு செய்யப்பட்டார்.
நாளை மறுநாள் (14/7) இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி மாலை 5:30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.
