சீனாவின் சர்ச்சைக்குரிய கப்பல் இலங்கைக்கு வருவது உறுதி செய்யபப்ட்டுள்ளது. இம்மாதம் 16 ஆம் திகதி யுவன் வோங் 05 கப்பல் இலங்கையை வந்தடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா இராஜதந்திரிகள் சீனா கப்பலின் வருகையினை மறுப்பதற்கான உரிய காரணத்தை கூற தவறிய நிலையில், இலங்கை அரசு கப்பலின் வருகைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
11 ஆம் திகதி வருகை தரவிருந்த கப்பல், 16 ஆம் திகதி வருகை தந்து ஐந்து தினங்களுக்கு இலங்கை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்திருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சீனா கப்பலின் வருகைக்கு தனது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் கப்பலின் வருகையினை பிற்போடுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீனாவிடம் கோரிக்கையினை முன் வைத்திருந்தது.
அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்க தூதுவரிடம் சீனா கப்பலின் வருகையினை எதிர்ப்பதற்கான காரணத்தை கோரிய வேளையில் சரியான காரணத்தை அவர் கூறவில்லை என இந்த செய்தியினை வெளியிட்டுள்ள ஊடகம் சுட்டிக் காட்டியுள்ளது. அத்துடன் இந்தியாவின் உயர் ஸ்தானிகராலயமும் உரிய காரணத்தை வெளியிடவில்லை என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா உயர்ஸ்தானிகராலயத்திடம் விளக்கம் கோரப்பட்டது புது டெல்லிக்கு அறிவிக்கப்படவில்லை என இந்திய செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் “இந்த கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்காவிட்டால், இலங்கை பாரிய பொருளாதார பின்னடைவு எதிர்கொள்ளும் என அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது” எனவும் மேலும் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.