அரச நிறுவனங்களின் செலவினங்களை கட்டுப்படுத்த தவறும் நிறுவன உயர் அதிகாரிகள், மேலதிக செலவினங்களை தங்கள் சொந்த பணத்தில் பொறுப்பெடுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் அவரது செயலாளர் சமன் எக்கநாயக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திறைசேரி செயலாளரினால் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையினை இறுக்கமாக கடைபிடிக்குமாறும் செலவினங்களை கட்டுப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருள், மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள், நீர் கட்டணங்கள், அடங்கலாக தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்துமாறு வெளியிடப்பட்ட சுற்றைக்கையில் பணிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அனுமதியின்றி வழங்கப்பட்ட வேலைத்திட்டங்களையும் நிறுத்துமாறும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரதம நீதியரசர், மேல் நீதிமன்றம், மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், நீதி சேவை ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்களுக்கு அமைச்சுகளின் செயலாளர்கள், அரச நிறுவன தலைவர்கள் தொடர்பாடல்களை செய்வதனை கடிதங்கள் அனுப்புவதனை நிறுத்துமாறும், தேவையேற்படின் சட்டமா அதிபர் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறும் சமன் எக்கநாயக்க அறிவுரை வழங்கியுள்ளார். அத்தோடு அவ்வாறான கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தினூடாக மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட முடியுமெனவும் மேலும் கூறியுள்ளார்.