இலங்கையில் சீனா இராணுவ நடவடிக்கைளில் ஈடுபட முடியாது – ஜனாதிபதி

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ தேவைகளுக்கு பாவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனுமதியளிக்காது என இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவின் விஞ்ஞான ஆய்வு கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளமையினால் இந்தியா மற்றும் அமெரிக்க அரசாங்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தினை போக்கும் முகமாக ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு கையளிக்கப்பட்டது. இவ்வாறு குத்தகைக்கு வழங்கப்படுவது புதிதல்ல என கூறியுள்ள ஜனாதிபதி ரணில், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளிலும் இவ்வாறு துறைமுகங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை, சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடனை மீள வழங்க முடியாத நிலையில், இந்த 99 வருட குத்தகை பண்டமாற்று நடைபெற்றது. ரணில் பிரதமராக இருந்த நல்லாட்சி அரசாங்கத்திலேயே இந்த பண்டமாற்று நடைபெற்றது.

இந்த துறைமுகத்தினை சீனா குத்தகைக்கு எடுத்ததன் மூலம், சீனா இந்துசமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்த்தும் என இந்தியா மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் அச்சம் கொண்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையிலேயே யுவன் வோங் 05 ஆய்வு கப்பல் இலங்கை வந்துள்ளது.

“வருகை தந்துள்ள கப்பல் இராணுவ கப்பல் அல்ல. அது விஞ்ஞான ஆய்வு கப்பல். அதன் காரணமாகவே அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என கப்பலின் வருகை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானின் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையினை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ள ஜனாதிபதி, இம்மாத இறுதிக்குள் அது நிறைவடையுமெனவும், பெரியளவிலான கடன் வழங்கும் நாடுகளான சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளுடனும் கடன் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version