பெளத்தமயமாக்களுக்கு எதிராக மட்டுவில் போராட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் திட்டம் மற்றும் தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு,செங்கலடியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி,கால்நடை பண்ணையாளர்கள்,பொது அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தன. மட்டக்களப்பு,செங்கலடி சந்தியில் ஒன்றுகூடிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ‘அத்துமீறிய காணி அபகரிப்பினை நிறுத்து, மயிலத்தமடு மாதவனையில் தமிழர்களின் கால்நடைகளை அழிக்காதே, பௌத்தமயமாக்கலை நிறுத்து, உலக வங்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பல்வேறு நிதி அமைப்புகள் ஊடாக பெறப்படும் கடன்களைக்கொண்டு தமிழர்களின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுவதனால் கடன்களை நிறுத்து, போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு மக்கள் பங்குகொண்டனர்.

தமிழர்களின் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் உலக நாடுகளின் நிதியுடன் இனவாத கட்டமைப்பாக செயற்படும் மகாவலி அபிவிருத்தி சபை தமிழர் பகுதிகளில் சிங்களவர்களைக்கொண்டு வன்முறை வழியில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.

மயிலத்தமடு,மாதவனையில் நூறு வருடங்களுக்கு மேல் கால்நடைகளை தமிழர்கள் மேய்த்துவரும் நிலையில் அப்பகுதியில் உள்ள தமிழ் கால்நடை பண்ணையாளர்களை அகற்றி அ ங்கு பௌத்த மயமாக்கலை செய்யும் நடவடிக்கைகளை மகாவலி அபிவிருத்தி சபை முன்னெடுப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பண்ணையாளர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட மகஜரும் வாசிக்கப்பட்டது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version