இலங்கையின் திட்டமிட்ட குற்றக் கும்பலின் தலைவனும் , பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘ஹரக் கட்டா ‘ என அழைக்கப்படும் நந்துன் சிந்தக்க ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி டுபாயில் கைது செய்யப்பட்டுள்தனை இன்டர்போல் உறுதி செய்துள்ளது. இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 30 நாட்களுக்குள் நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் தனது மனைவி என கூறப்படும் பெண் ஒருவருடன் மலேசியாவிற்கு தப்பிச்செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்தாகவும் சர்வதேச பொலிஸார் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக் கட்டா’ இலங்கையில் மட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர், சீஷெல்ஸ், மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகளில் இயங்கி வரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து போதைப்பொருள் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.