இன்று சர்வதேச சுற்றுலா தினமாகும். இலங்கையை பொறுத்தளவில் சுற்றுலா துறை மிகவும் முக்கியமானது. இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை மிகவும் பெரியளவில் பங்களிக்கிறது. இன்றைய தினம் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சுற்றுலா தின செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
பண்டைய காலம் தொடக்கம் இன்றுவரை இலங்கையானது வரலாறு, சுற்றுச்சூழல் மற்றும் சிறந்த காலநிலைகளைக் கொண்டதான சுற்றுலா மையமாக இருந்து வருகிறது.
சுற்றுலாத்துறை சம்பந்தமான பல்வேறு சேவைகளை வழங்குவதன் மூலம் நாட்டுக்கு அந்நியச் செலவாணியை வாரி வழங்குகினாலும் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக பாரியளவில் செயற்படாமல் இருக்கின்றது.
இருப்பினும் உலகில் பல நாடுகள் பயணங்களுக்கான அனுமதியை வழங்கி வரும் இவ்வேளையில், சுற்றுலாப் பயணிகளின் கவனம் இலங்கையை நோக்கி அதிகரித்துள்ளது.
இன்றைய நாளில், உலகெங்கும் உள்ள அனைத்து சுற்றுலா பயணிகளையும் இலங்கையின் அழகை ரசிக்க ஒரு ஆத்மார்த்தமான பயணத்திற்கு வருமாறு அழைக்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதில் சுற்றுலாத்துறையினால் அதற்கு கிடைக்கும் பங்களிப்பு அளப்பரியதாகும். இந்நாட்டின் சுமார் மூன்று மில்லியன் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரமாகவும், தமது வர்த்தக இலக்குகளை அடைந்து கொள்வதற்குமான பணி நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பிரதான மார்க்கமாகும் என்பதையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரான அமைதியான மற்றும் சுதந்திரமான சூழல் இந்நாட்டின் சுற்றுலாத்துறையின் வேகமான வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது. எனினும் அதன் பின்னரான காலப்பகுதியில் நாட்டினுள் இடம்பெற்ற பாதுகாப்பற்ற செயற்பாடுகள் மற்றும் கொவிட் தொற்று காரணமாக சுற்றுலாத்துறை மற்றும் அதில் தங்கிவாழும் மக்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகினர்.
மக்களை பாதுகாத்து இந்த தொற்றை எதிர்கொள்ளும் சவாலை ஏற்றுக்கொண்டுள்ள அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன் முன்னேற்றத்திற்கமைய வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சூழலை நிர்மாணிப்பதற்கு அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே செயற்படுத்தியுள்ளதுடன், ஸ்ரீலங்கன் விமான சேவையானது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக தேசிய விமான சேவையின் பணிகளை நிறைவேற்றி வருகின்றது.
இயற்கை அழகு மற்றும் பாரம்பரிய மரபுரிமைகள் நிறைந்த எமது தாய்நாட்டின் சுற்றுலாத்துறைக்கு புதிய கவர்ச்சிகரமான விடயங்களை அறிமுகப்படுத்தும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
தொற்று நிலைமைக்கு மத்தியிலும் அதற்கு முகங்கொடுத்து ஒரு நாடு என்ற ரீதியில் முன்னோக்கி பயணித்து வருகின்றோம். அதனால் உலகின் பேண்தகு இலக்கிற்கு ஏற்ற வகையிலான சுற்றுச்சூழல் மற்றும் கலாசாரம் சார்ந்த சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
‘ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான சுற்றுலாத்துறை’ என்ற காலத்திற்கு உகந்த தொனிப்பொருளுக்கு அமைய இம்முறை கொண்டாடப்படும் சர்வதேச சுற்றுலா தினத்திற்கு நாம் மிகுந்த ஆர்வத்துடன் ஒன்றிணைவதுடன், இலங்கைக்கு சுற்றுலா வரும் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பயண அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது இலங்கையர் எமது எதிர்பார்ப்பு என்பதையும் நினைவுகூருகின்றேன் என தனது வாழ்த்து செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
