முல்லை கோட்டாபய முகாமுக்கான நில அளவீடு இடைநிறுத்தம் .

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள “கோட்டாபய கடற்படை கப்பல் ” கடற்படை முகாமுக்காக இன்றைய தினம் (23) பொதுமக்களின் 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு முயற்சி காணி உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், பிரதேச மக்களின் எதிர்ப்பால் கைவிடப்படுள்ளதுடன் நில அளவீட்டுக்காக வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகள் திரும்பி சென்றுள்ளனர்.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைத்துள்ள கடற்படையினர் அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த சில வருடங்களாக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பல தடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்ய எடுத்த முயற்சிகள் காணி உரிமையாளர்களான மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வௌியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகியிருந்ததோடு காணி உரிமையாளர்களான தமிழ் மக்களை காணி ஆவணங்களோடு வருகைதந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்க அளவீடுகளை செய்ய எல்லைகளை அடையாளம் காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தது .

இந்நிலையில் காணி சுவீகரிப்புக்கான அளவீடுகள் மேற்கொள்ள முற்பட்டபோது தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையால் அளவீட்டு பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை இந்த நிலையில் இன்றையதினம் (23.08) மீண்டும் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் ஏற்பாடாகியிருந்த நிலையில் 15 காணி உரிமையாளர்கள் இழப்பீடுகளை பெற்றுக்கொண்டு காணிகளை கடற்படைக்கு வழங்க இணக்கம் தெரிவித்து அளவீடுக்கு வருகைதந்திருந்தனர்.

இந்த நிலையில் மேலும் ஒரு தொகுதி மக்கள் தமது காணிகளை சுவீகரிக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன் , சிவநேசன் ஆகியோருடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இந்த காணி சுவீகரிப்பு தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காணி உரிமையாளர்களை அழைத்து பொதுவான ஒரு கூட்டத்தை மாவட்ட செயலகத்தில் கூட்டி முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் ஏற்கனவே காணி உரிமையாளர்களான மக்களை தனியே மாவட்ட செயலகத்துக்கு அழைத்து கூட்டத்தை வைத்து முடிவுகளை எடுத்த பின்னணியில் சில காணி உரிமையாளர்களுக்கு புலனாய்வு தரப்பினரின் அழுத்தங்கள் பிரயோகிக்க பட்டுள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் நில அளவை திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்ததோடு மேற்குறித்த கோரிக்கை அடங்கிய கடிதமும் காணி உரிமையாளர்களின் கையொப்பத்துடன் நில அளவை திணைக்கள அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது . இதன் பின்னணியில் அளவீட்டு பணிகளை நிறுத்தி நில அளவை திணைக்கள அதிகாரிகள் திரும்பிச் சென்றுள்ளனர்

மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் கலகம் அடக்கும் பொலிஸார் பிரசன்னமாக்கிருந்ததோடு அதிகளவிலான புலனாய்வாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்கமுடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version