ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழுமையான பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவர் குறைந்தது 7 வருடங்களுக்கு அரசியலில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள சஜித், சகல நடவடிக்கைகளிலும் ஈடுபடும் படியான மன்னிப்பே முழுமையான மன்னிப்பு என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், அரசாங்கமும் ரஞ்சனக்குக்கு முழுமையான பொது மன்னிப்பினை வழங்கி, அவர் அரசியலில் ஈடுபடும் சூழலை உருவாக்க வேண்டுமென நேற்று(26.08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டம் 34 (1) இன் அடிப்படையிலேயே ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த விடுதலை நிபந்தையுடன் கூடிய விடுதலை. 34(2) இன் கீழ் பொது மன்னிப்பு வழங்கினால் மட்டுமே அது முழுமையான பொது மன்னிப்பு என நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒருவர் 2 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றுக் கொண்டால், அவர் 7 வருடங்களுக்கு அரசியல் உரிமை மற்றும் குடியுரிமை இல்லாமல் போகுமென சஜித் கருத்து வெளியிட்டுள்ளார். இவ்வாறான நிலையில் அவருக்கு முழுமையான உரிமையினை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக மேலும் தெரிவித்துள்ளார்.