ஆசிய கிண்ண 20-20 இறுதிப் போட்டியில் முதற் தடவை இலங்கை,பாகிஸ்தான்

-டுபாய் மைதானத்திலிருந்து விமல்-

ஆசிய கிண்ணம் 2022 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி இன்று(11.09) ஐக்கிய அரபு இராட்சியம், டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை அணி பலமான அணியாக அதிக வாய்ப்பு உள்ள அணியாக இறுதிப் போட்டிக்கு களமிறங்குகிறது. பலமான அணிகளாக கருதப்பட்ட இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி பலமான அணியாக கருதப்படுகிறது. ஆணாலும் 20-20 போட்டிகளில் எந்த அணியினையும் முன் கூட்டியே எதிர்வு கூற முடியாது. அன்றைய தினத்தில் அணிகளது செயற்பாடுகளே முக்கியமானதாக அமையும்.

இந்த தொடரின் ஆரம்பத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் என்ற நிலைப்பாடு காணப்பட்டது. இவ்வாறன சூழலில் இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் அதிக டிக்கெட்களை வாங்கி வைத்துள்ளனர். அவற்றை இந்தியா ரசிகர்கள் அதிகமாக விற்று வருகின்றனர்.

பாகிஸ்தான் அணி எதிர்பார்க்கப்பட்டது போல இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியிடம் தோல்வியினை சந்தித்த நிலையில், இன்றைய இறுதிப் போட்டி கடுமையானதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி கடந்த போட்டியில் இரு மாற்றங்களை செய்து பார்த்துள்ள நிலையில், அதே அணியுடன் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இலங்கை அணி ஒரு வேகப்பந்து வீச்சாளரை நிறுத்தி மேலதிக துடுப்பாட்ட வீரர் ஒருவரை அணியில் சேர்ப்பது கூட பலனாக அமையும். சாமிக்க கருணாரட்ன, தஸூன் சாணக்க இருவருமே சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை கைப்பற்றுவதனாலும், தனஞ்சய டி சில்வா இன்றைய போட்டியில் விளையாடினாள் அவ்வாறு செய்வது பலமாக அமையும்.

பாகிஸ்தான் அணி கடந்த போட்டியில் ஓய்வினை வழங்கிய இரண்டு பந்துவீச்சாளர்களையும் மீண்டும் அணிக்குள் உட்கொண்டு வரவுள்ளனர்.

இரு அணிகளது துடுப்பாட்ட, பந்து வீச்சு நிலையினை ஒப்பீட்டு பார்க்கையில் சம பலமாக காணப்படுகின்றனர்.

மைதானத்தின் மத்திய ஆடுகளத்தில் போட்டி நடைபெறவுள்ளது. இலங்கையணி முதற் போட்டியில் விளையாடிய ஆடுகளம். வெயில் வழமையிலும் பார்க்க கொஞ்சம் குறைவாகவே காணப்படுகிறது. வழமையாக இரண்டு மணிக்கு 40 பாகை செல்சியசுக்கும் அதிகமாக காணப்படும் வெப்பம், இன்று 37 ஆகவே காணப்படுகிறது. மாலை 6 மணிக்கு 34 ஆக குறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது வீரர்களுக்கு சாதகமான நிலையாக அமையும்.

ஆடுகளம் கடந்த போட்டிகளை போன்றே சராசரியாக நல்ல ஓட்டங்களை வழங்குமெனவும், இரண்டாவது துடுப்பாடும் அணிக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

1984 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 11 தடவைகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. அதில் 5 தடவைகள் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 20-20 தொடராக இந்த தொடர் மாற்றப்பட்டதன் பின்னர் இரண்டு தடவைகளிலும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகவில்லை. இதுவே முதற் தடவை.

பாகிஸ்தான் அணி ஆசிய கிண்ண தொடரில் மூன்றாமிடத்திலேயே காணப்படுகிறது. இறுதிப் போட்டிக்கு நான்கு தடவைகள் தெரிவாகி, இரண்டு தடவைகள் வெற்றி பெற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த வருடமே இறுதிப் போட்டிக்கு முதற் தடவையாக தகுதி பெற்றுள்ளது. 20-20 தொடராக ஆசிய கிண்ண தொடர் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தடவைகளும் இந்தியா – பங்களாதேஷ் இறுதிப் போட்டிகளே நடைபெற்றுள்ளன.

ஆக இந்த வருடஆசிய கிண்ண போட்டி ஒரு புதிய இறுதிப் போட்டியினை வழங்கியுள்ளது. எனவே இந்த இறுதிப் போட்டி மிகுந்த விறு விறுப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version