பாராளுமன்ற தேசிய சபை இன்று(23.09) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவினால் பாரளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய சபையின் நிறைவேற்றுக் குழு அமைச்சரவை அமைச்சர்கள், பாரளுமன்ற பொது நிறுவன குழு, பாரளுமன்ற பொது கணக்குகள் குழு, பொது நிதி குழு, பாராளுமன்ற பொருளாதர குழு போன்றவற்றிடம் விளக்கம் கோரும் அதிகாரம் உள்ள குழுவாக செயற்படும்.
பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பதற்கும், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசியக் கொள்கைகளை உருவாக்குவதற்கு வழிகாட்டுவதற்கும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் திட்டங்களை ஏற்றுக்கொள்வதற்கும் இந்தக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவர்களாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன, பிரதமர் டினேஷ் குணவர்தன, பாராளுமன்ற குழுக்களின் தலைவர் சுசில் பிரேம்ஜயந்த், ஆளும் கட்சி பிரதம கொரோடா பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, எதிர்க்கட்சி பிரதம கொரோடா லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, நஸீர் அஹமட், ரிறான் அலஸ் பிரதி அமைச்சர்கள் சிசிர ஜயக்கொடி, சிவநேசதுரை சந்திரகாந்தன், பாரளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரவுப் ஹக்கீம், பவித்திரா வன்னியாராச்சி, வஜிர அபேயவர்தன, பழனி திகாம்பரம், மனோ கணேசன், உதய கம்மன்பில, ரோஹித அபேயகுணவர்தன, ஜீவன் தொண்டமான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வண. அத்துரலிய ரத்ன தேரர், அசங்க நவரத்ன, அலி சப்ரி ரஹீம், சி.வி விக்னேஸ்வரன், வீரசுமன வீரசிங்க, சாகல காரியவசம், நாமல் ராஜபக்ஷ, ரிஷாட் பதியுதீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அந்தந்த கட்சிகள் பரிந்துரை செய்தவர்களின் அடிப்படையில் இந்த உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த குழுவுக்கான பரிந்துரைகளை வழங்கவில்லை. அத்தோடு மக்கள் விடுதலை முன்னணி, பொதுஜன பெரமுன சுயாதீன குழு ஆகியவர்கள் பெயர்களை வழங்கவில்லை. அதன் காரணமாக இந்த கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவில்லை.