மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று பங்களாதேஷில் ஆரம்பித்தது. முதற் போட்டியில் பங்களாதேஷ் அணி இலகுவாக வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணியினை இந்தியா அணி வெற்றி பெற்றது. இந்தியா அணி சார்பாக தமிழக வீராங்கனை ஹேமலதா இலங்கை அணியினை வெற்றி பெற முக்கியமான காரணமாக அமைந்தார்.
பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய தாய்லாந்து அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களை பெற்றது. பன்னிட்டா மாயா 26 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ருமானா அஹமட் 3 விக்கெட்களையும், நதிகா அக்டெர், சஞ்சிதா அக்தர் மேஹ்லா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 11.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 88 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஷாமிமா சுல்தானா 49 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 6 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் ஜெமிமா ரொட்ரிகஸ் 76 ஓட்டங்களையும், ஹர்மன்பிரீட் கோர் 33 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் ஒஷாதி ரணசிங்க 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஹாசினி பெரேரா 30 ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரம 26 ஒட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதா 3 விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டார். தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ரகர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
நாளையதினம் மலேசியா,பாகிஸ்தான் அணிகள் முதற் போட்டியிலும், இலங்கை, ஐக்கிய அரபு இராட்சியம் அணிகள் இரண்டாவது போட்டியிலும் மோதவுள்ளன.