2023 இல் நாடு வழமைக்கு திரும்புமென சுற்றுலா துறை அமைச்சர் நம்பிக்கை

2023 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதமளவில் இலங்கை வழமைக்கு திரும்புமென சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12 ஆம் இடத்தை பெற்றுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போது இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.

சுற்றுலாவுக்கான உலக சமூக இணையம் ஒன்று சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பான நாடுகளை பட்டியல்படுத்தியுள்ளது. ஐஸ்லாந்து முதலாவது இடத்தை இந்தப் பட்டியலில் பெற்றுள்ளது. நாட்டின் தற்போதைய சூழிநிலைக்கு மத்தியிலும் இலங்கை இவ்வாறு தரப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பான விடயம் எனவும் ஹரின் கூறியுள்ளார்.

அமைச்சரவையுடன், சர்வதேச நாணய நிதியம் இணையவழி முறையில் அவர்களது நடவடிக்கைகள் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்ததாகவும், அதன் படி டிசம்பர் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டாதாக ஹரின் மேலும் கூறியுள்ளார்.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் அடுத்த வருடம் ஜனவரி – பெப்ரவரி மாத பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் பணத்தினை நாட்டுக்கு கொண்டு வர முடியும். அதன் பின்னர் பிற நாட்டு கடன்களை ஏப்ரல் மாதத்துக்குள் கொண்டு வரவ முடியும். இவை நடைபெற்றால் இலங்கை நாணய மதிப்பு சீரான நிலைக்கு வந்துவிடும். நாடும் வழமைக்கு திரும்பி விடுமென சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இவை நடைபெற்று நாடு வழமைக்கு திரும்பினால், அரசியல் மறுசீரமைக்கு செல்ல முடியும். அதன் பின்னர் 6 மாதங்களில் தேர்தலுக்கும் செல்ல முடியுமென அவர் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version