தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தல அஜித் எச்.வினோத் இயக்கத்தில், போனிக்கபூரின் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத தோற்றத்தில் நடித்து அத் திரைப்படம் பலரது வரவேற்பையும் பெற்றிருந்தது.
தற்போது மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனிக்கபூரின் தயாரிப்பில் வலிமை திரைப்படத்தில் நடித்துவருகின்றார் நடிகர் அஜித்குமார்.
தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கும் இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ கடந்த வாரம் போனிகபூரால் வெளியிடப்பட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதுடன் இத்திரைப்படம் அடுத்தவருடம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது போணிகபூர் தனது அடுத்த திரைப்படத்தையும் அஜித், எச்.வினோத் கூட்டணியில் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த அவர், தனது மனைவியான ஸ்ரீதேவி இறப்பதற்கு முன்னமே அஜித் தன்னிடம் கதையைக் கூறுமாறு எச்.வினோத்தை மும்பைக்கு அனுப்பிவைத்ததாகவும், எச்.வினோத்துடன் தமிழில் உரையாடிய ஸ்ரீதேவிக்கு அவர் கூறிய கதைகள் அனைத்தும் பிடித்திருந்ததாகவும், இக் கூட்டணி தனக்கும் பிடித்துள்ளதுடன் தான் தயாரிக்கவுள்ள அடுத்த திரைப்படத்திலும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை போன்ற மாறுபட்ட புது விதமான இயக்கத்தின் மூலம் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்கள் வரிசையில் இடம்பிடித்துள்ள இயக்குனர் எச்.வினோத் இயக்குனர் சிவாவிற்கு அடுத்து அஜித்குமாரை வைத்து தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களை இயக்கவுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அஜித் ரசிகர்கள் ஆனந்தம் அடைந்துள்ளபோதும் ஒரு திரைப்படத்திற்கே அப்டேட் கிடைக்க பெரும்பாடு இன்னொரு திரைப்படமா எனவும் அங்கலாய்த்து வருகின்றனர்.