பங்களாதேஷிடம் இந்தியா தொடரை இழந்தது

பங்களாதேஷ் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் இன்று (07.12) மிர்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணி 05 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. தொடர் நிறைவடைய இன்னுமொரு போட்டி மீதமுள்ளது.

இந்தியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மா இன்று உபாதையின் காரணமாக 09 ஆம் இடத்தில் துடுப்பாடினார். இந்தியா அணி பங்களாதேஷ் அணிக்கு கடும் சவாலை வழங்கியது. முதலிடத்தில் உள்ள இந்தியா அணியை பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகளிலுமேயே அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளது மிக அபாரமான திறமையே.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது

முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்களை பெற்றது. பங்களாதேஷ் அணி ஆரம்பத்திலிருந்தே விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. ஒரு கட்டத்தில் 69 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்கள் என்ற நிலையில் ஜோடி சேர்ந்த மெஹிடி ஹசான் மிராஸ், மஹமதுல்லா ஜோடி மீட்டெடுத்தது. 148 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பகிர்ந்தார். மெஹிடி ஹசான் மிராஸ் அவரின் முதற் சதத்தை பூர்த்தி செய்து அணியின் ஓட்ட எண்ணிக்கையினையும் அதிகரித்துக்கொடுத்தார். இதில் மெஹிடி ஹசான் மிராஸ் ஆட்டமிழக்காமல் 100(83) ஓட்டங்களையும், மாஹ்மடுல்லா 77(96) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களையும், மொஹமட் சிராஜ், உம்ரன் மாலிக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றிக் கொன்டனர்.

பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷ்ரேயாஸ் ஐயர் 82(102) ஓட்டங்களையும், அக்ஷர் படேல் 56(56) ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 51(28) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ரோஹித் ஷர்மா உபாதையடைந்தமையினால் ஒன்பதாவது இடத்தில் துடுப்பாட களமிறங்கி தனித்து நின்று போரடிய போதும் வெற்றியினை நோக்கி செல்ல முடியவில்லை. இறுதி ஓவரில் வெற்றி பெற 20 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 14 ஓட்டங்களை’பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் எபடொட் ஹொசைன் 3 விக்கெட்களையும், மெஹிடி ஹசான் மிராஸ், ஷகிப் அல் ஹசான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும், மஹ்மடுல்லா, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக மெஹிடி ஹசான் மிராஸ் தெரிவு செய்யப்பட்டார்.

10 ஆம் திகதி காலை 11.30 இற்கு சட்டோகிராமில் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version