இந்தியாவின் புதுடெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டின் காரணமாக கடந்த சில நாட்களாக இலங்கையிலும் மிக மோசமான காற்று மாசுபாடு நிலை காணப்படுகிறது.
நேற்றைய தினத்துடன் (11.12) ஒப்பிடும்போது இன்று (12.12) பல மாவட்டங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் வெளியாகியுள்ளது.
மேலும், காற்று மாசுபாடு இன்று மிதமான அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதனால் உடல் நலத்திற்கு கேடு இல்லை எனவும், எனினும் சுவாச கோளாறுகள் இருக்கும் நபர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தர சுட்டெண்ணின் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் நேற்று 123 ஆக காணப்பட்ட தர சுட்டெண் இன்று 111 ஆக குறைந்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் இதன் பெறுமதி 97ல் இருந்து 69 ஆக குறைந்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்றும் இன்றும் 77 ஆகவே தர சுட்டெண் பதிவாகியுள்ளது.
யாழில் நேற்றைய தினம் 109 ஆகவும் இன்று 103 ஆகவும் பதிவாகியுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் நேற்று 91 ஆக இருந்த இந்த பெறுமதி இன்று 69 ஆக குறைந்துள்ளது.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் நேற்று 69 ஆக இருந்த சுட்டெண் பெறுமதி இன்று 60 ஆகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று 83 ஆக இருந்த சுட்டெண் பெறுமதி இன்று 80 ஆகவும் குறைந்துள்ளது.
எவ்வாறாயினும், தரவுகளின் அடிப்படையில், நேற்றைய தினத்தை விட இன்று சுமார் 7 மாவட்டங்களில் காற்று மாசு அளவு அதிகரித்துள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் தர சுட்டெண் 89 இல் இருந்து 140 ஆகவும், கேகாலை மாவட்டத்தில் தர சுட்டெண் 97 இல் இருந்து இன்று 151 ஆக அதிகரித்துள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நேற்று 86 ஆக இருந்த சுட்டெண் இன்று 106 ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர, கண்டி, குருநாகல், காலி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் நேற்றைய நிலவரப்படி காற்றின் மாசு அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரத்தை ஒத்ததாக இந்த நிலை காணப்படுவதாகவும், எதிர்வரும் சில தினங்களில் இந்நிலை தொடரும் என எதிர்பார்க்கலாம் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.