நாட்டில் நிலவும் கொவிட் தொற்று அதிகரிப்பின் காரணமாக முடக்கப்பட்டிருந்த நாடு கடந்த முதலாம் திகதி முதல் வழமைக்குத்திரும்பிள்ளது.
எனினும், அரசாங்கம் மக்களை கொவிட் கட்டுப்பாடுகளுக்கமைய செயற்படுமாறு அறிவுத்தியுள்ளதுடன் அதற்குரிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக பேருந்து ஓட்டுனர்களும் நடத்துனர்களும் தமது பணியை விட்டு வேறு தொழிலில் ஈடுபட்டுவருவதாகவும் இதனால் மேல் மாகாணத்தில் மாத்திரம் 3000 பேருந்துகள் செயற்பட்டு வந்த வேளை தற்போது 900 பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாக போக்குவரத்து அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாகன ஒழுங்குபடுத்தல்கள், பேருந்து போக்குவரத்து சேவைகள், புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டர்வாகன கைத்தொழில் அமைச்சர் திமுன் அமுனுகம, எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் நாட்டில் இயங்கவுள்ள பேருந்துகள் அனைத்தும் கண்காணிக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் கொவிட் நிலைமைக்கேற்ப பயணத்தின் போதான கொவிட்சுகாதாரக் கட்டுப்பாடுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பேருந்து இருக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து நடத்துனர்கள் கைது செய்யப்படவுள்ளதுடன் குறித்த பேருந்தின் வாகன அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
