பாடசாலை வீரர்களுக்கான ஒப்சேவர் விருது வழங்கும் நிகழ்வில் சாருஜன் சண்முகநாதன் சிறந்த விக்கெட் காப்பாளராக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். சிறந்த பாடலசாலை வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் இந்து விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துக்கான(2021) விருது இது. கடந்த மூன்று வருடங்களாக 19 வயதுக்குடுப்பட்ட பிரிவில் அவர் விளையாடி வருகிறார். கொழும்பு, கொட்டஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியில் தற்போது தரம் 11 இல் ஷாருஜன் கல்வி கற்று வருகின்றார். 15 வயதிலேயே இந்த விருதினை அவர் வென்றுள்ளது மிகப் பெரிய சாதனையாகும்.
சிறந்த விக்கெட் காப்பளாராகவும், துடுப்பாட்ட வீரராகவும் திகழ்ந்து வருகிறார் ஷாருஜன். எதிர்காலத்தில் இலங்கை அணிக்குள் இடம் பிடிக்க கூடிய வீரர் என சிறு வயதிலேயே இனம் காணப்பட்டவர். சிறு வயதில் இவர் துடுப்பாடிய விதத்தை பார்த்து மறைந்த நேர்முக வர்ணனையாளர் ரொனி க்ரேக் இவருக்கு குட்டி சங்கா என பெயர் சூட்டினார். ஆனால் ஷாருஜனுக்கு அவ்வாறு சொல்வதில் விருப்பமில்லையாம். தான் ஷாருஜனாக தன் திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் என ஆசைப்படுகிறார் என அவரது தகப்பன் படப்பிடிப்பாளர் நாதன் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
ஷாருஜன் இதுவரையில் எந்த கழகத்துடனும் இணையவில்லை. சில முன்னணி கழகங்கள் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளன. தமிழ் யூனியன் கழகத்தின் தலைவர் பிரகாஷ் ஷாப்டர் அவருக்கான அழைப்பை நேரடியாக வழங்கியுள்ளார். விரைவில் தமிழ் யூனியன் கழகத்துடன் இணையும் வாய்ப்புகள் உள்ளதாகவும் நம்பப்படுகிறது.
இந்த விருது வழங்கும் நிகழ்வில் தற்போதைய இலங்கை அணியின் வீரர் டுனித் வெல்லாலகே சிறந்த வீரருக்கான விருதுகள் உட்பட மூன்று விருதுகளை வெற்றி பெற்றுள்ளார்.
ஷாருஜன் பாடசாலை மட்ட போட்டிகளில் இந்த வருடம் மிக சிறப்பாக துடுப்பாடி வருகிறார். சகல போட்டிகளிலும் ஓட்டங்களை குவித்து வருகிறார். அடுத்த வருட விருது நிகழ்வில் ஷாருஜன் இன்னும் பல விருதுகளை வெற்றி பெற வாழ்த்துக்களை எமது ஊடகம் தெரிவித்துக்கொள்கிறது.

