ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் டினேஷ் சாப்டரின் கொலை தொடர்பில் குற்றுப்புலனாய்வு துறையினர் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். டினேஷ் மீட்க்கப்பட்ட இடத்துக்கு சென்ற குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தடயங்கள் சேகரிக்கப்பட்டமுள்ளன. பொரளை பார்ம் வீதியினூடாக அவருடைய வாகனம் பொரளை மயானத்துக்குள் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வான் படை நினைவு தூபி ஒன்றுக்கு முன்னதாக கார் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. தகனசாலை மூன்றுக்கும், இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே வாகனம் நிறுத்தப்பட்டிருந்துள்ளது.
இறந்த டினேஷ் சாப்டர் முன்னாள் விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளரும், இலங்கை கிரிக்கெட் முன்னாள் ஊடக முகாமையாளருமான பிரைன் தோமஸை சந்திக்க செல்வதாக தனது செயலாளரிடம் கூறி சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரைன் தோமஸுக்கும், டினேஷ் சாப்டருக்குமிடையில் கொடுக்கல் வாங்கல் சிக்கல் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. 1.4 பில்லியன் ரூபா பணத்தை பிரைன் தோமஸ் கடனாக வாங்கியதாகவும், அதனை மீள வழங்கவில்லை எனவும் டினேஷ் வழங்கிய புகாரின் அடிப்படையில் பிரைன் தோமாஸ் 2019 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். வியாபாரம் ஒன்றின் தரகராக தோமஸ் செயற்பட்டுள்ளதாகவும், அவர் பணத்தை நேரடியாக பெறவில்லை என்ற அடிப்படையிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. அவருக்கும் கொலைக்கும் சம்மந்தம் இருக்கிறதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரைன் தோமஸ் பிரபல ஆடை நிறுவனம் ஒன்றுக்கு பணம் முதலீடு செய்வது தொடர்பிலான தரகு வேலைகளில் ஈடுப்பட்டே இவ்வாறு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக இந்த விடயம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் தெரியவந்திரிந்தது.
டினேஷ் அவரது கொழும்பு, பிளவர் வீதி இல்லத்திலிருந்து நேற்று(15.12) பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு கிளம்பியதாகவும், பிரைன் தோமஸ் 1.4 பில்லியன் ரூபா கடன் வாங்கியுள்ளதாகவும், அது தொடர்பில் அவரை சந்திக்க செல்வதாக தனக்கு கூறியதாகவும், அவரின் செயலாளர் பொலிஸாருக்கு கூறியுள்ளார்.
நடைபெற்றுள்ள கொலை, ஒப்பந்த கொலை என்பதனை பொலிஸார் உறுதி செய்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்தோடு மயானத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் ரக்னா லங்கா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளது.
மயான காப்பாளர் எவரும் அங்கில்லை எனவும், அங்குள்ள வேலையாட்களே அதனை செய்வதாகவும், இவ்வாறான நிலையில் தங்கள் எதிரிகளை கொலை செய்ய இந்த இடத்தை கொலை காரர்கள் தெரிவு செய்வதில் எந்த ஆச்சரியமுமில்லை என மாநகரசபை உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அதனை மறுத்த மாநகரசபை அதிகாரி ஒருவர், மயான காப்பாளர் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், உதவி மயான காப்பாளர் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
டினேஷ் சாப்டர் கொலை செய்தி