கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அலுவலக வளாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சுற்றுலா அபிவிருத்திச்சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி உள்ளிட்ட கொண்டாட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  நேற்று (18.12) மாலை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியைக் காண பெருந்திரளான மக்கள் இன, மத பேதமின்றி ஜனாதிபதி அலுவலக வளாகத்தைச் சுற்றி திரண்டிருந்தனர். நிகழ்ச்சியைக் காண்பதற்காக அங்கே குழுமியிருந்த மக்களிடம் ஜனாதிபதி சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டிருந்ததுடன் அவர்கள்,  ஜனாதிபதிக்கும் அமோக வரவேற்பளித்தனர்.

அங்கு வருகை தந்திருந்த சிறுவர்களிடம் விவரங்களை கேட்டறிந்த ஜனாதிபதி, அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த பாடகர் குழுவினரின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் கிறிஸ்துமஸ் கரோல் நிகழ்ச்சியும் ஆரம்பமானது.

டி.எஸ் சேனாநாயக்கவின் சிலைக்கு முன்பாக உள்ள படிக்கட்டுகளில்
அமர்ந்திருந்த ஜனாதிபதி, அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருடன் இணைந்து கிறிஸ்மஸ் கரோல் இசை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

இந்த கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்கள் டிசம்பர் 23ம் திகதி வரை இரவு 7.00 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். இதேவேளை, ஆயுதப் படைகள் மற்றும் பொலிஸ் இசைக்குழுக்களின் பங்கேற்புடன் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதுடன், ஜனாதிபதி அலுவலக வளாகத்தில்
அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்மஸ் மரத்தை பொதுமக்கள் கண்டுகளிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version