அரச வெற்றிடங்களுக்கு மீள் ஆட்சேர்ப்பு இல்லை!

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி ஓய்வுபெறவுள்ள அரச உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களுக்கு மீள் ஆட்சேர்ப்பு இடம்பெறாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

திணைக்களங்கள், மாநிலங்கள், கூட்டுத்தாபனங்கள் உட்பட அரச துறையின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முப்பதாயிரம் அரச ஊழியர்கள் டிசம்பர் 31ம் திகதிக்குள் ஓய்வுபெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரச துறையில் அனைத்து ஆட்சேர்ப்புகளையும் நிறுத்துவதற்கான சுற்றறிக்கை அறிவிக்கப்படாத போதிலும், ஓய்வு பெறுவதால் ஏற்படும் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்ப முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தில் ஏற்படும் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், நிதியமைச்சு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் அங்கீகாரம் பெறும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் எனவும், 2020ம் ஆண்டு நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 1400 பேருக்கு அலுவலக உதவியாளர் நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வருட இறுதியில் அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வுபெறவுள்ள நிலையில் அவர்களை சமநிலைப்படுத்தும் நோக்கில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் உள்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோர் அடங்குகின்றனர்.

60 வயதை பூர்த்தி செய்யும் அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்படும் வெற்றிடங்கள் தொடர்பில் இந்த குழு கவனம் செலுத்தி ஆட்சேர்ப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்கவுள்ளது.

இந்தக் குழுவின் பரிந்துரைகள் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அரச வெற்றிடங்களுக்கு மீள் ஆட்சேர்ப்பு இல்லை!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version