உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹாரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 23ம் திகதி தமிழகத்தின் கோவை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் நேற்று புதன்கிழமை (28.12) கைது செய்யப்பட்டார் என தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சனோபர் அலி என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும் பெடரல் ஏஜென்சியால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கைது செய்யப்பட்ட ஷேக் ஹிதாயத்துல்லா, ஈஸ்டர் குண்டுவெடிப்புகளின் பிரதான சந்தேகநபரான சஹாரன் ஹாஷிமுடன் தொடர்பில் இருந்ததாகவும் இந்திய தேசிய புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய தேசிய புலனாய்வு அதிகாரிகளின் கூற்றுப்படி, 2017 முதல் ஐஎஸ் சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்து வரும் ஹிதாயத்துல்லா, இதற்கு முன்பு அசாருதீனுடன் 2019 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் 2020 இல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு வழக்கில் அசாருதீனும், கேரளா-தமிழ்நாடு ஐஎஸ் அமைப்பின் தலைவரும் தற்போது சிறையில் இருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் சஹாரான் ஹசிமினால் ஈர்க்கப்பட்டு, இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டபோது தென்னிந்தியாவின் இரண்டு மாநிலங்களில் இதேபோன்ற தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஹிதாயத்துல்லாவுக்கு எதிராக 2019ம் ஆண்டு இந்திய தேசிய புலனாய்வு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு முன்னர், ஹிதாயத்துல்லா மற்றும் ஹாஷிம் ஆகியோர் முகநூல் பக்கம் ஒன்றின் மூலம் தொடர்பில் இருந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
