கிளிநொச்சியில் உள்ள வீடொன்றுக்கு வந்த இனந்தெரியாத இருவர், வீட்டில் இருந்த இருவரை இரும்பு கம்பியால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் நேற்றுமுன்தினம் மற்றுமொரு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் இந்த சம்பவத்தில் உயிரிழந்த தனது நண்பரின் வீட்டிற்கு வந்ததாகவும், இருவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது இனந்தெரியாத இருவர் வந்து வீட்டிலிருந்த இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (02.01) இடம்பெறவுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
