யால தேசிய பூங்கா உட்பட இலங்கையின் தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இம்மாதம் முதல் டொலர்கள் செலுத்தி நுழைவு சீட்டு பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்துள்ளது.
நாட்டின் பொருளாதார விருத்திக்கு தேவையான டொலர்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி இம்மாதம் முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் முதலில் யால தேசிய பூங்காவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் சந்திர ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யால பூங்காவிற்கு இந்த நாட்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகழ் மற்றும் சேவைகளை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
புதிதாக கட்டப்பட்ட இரண்டு சுற்றுலா விடுதிகளின் பணிகள் முடிவடைந்துள்ளதால், அவை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட விரைந்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
