தமிழர் விடுதலை கூட்டணியின் வவுனியா மாவட்டத்துக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக கணேசநாதன் சபேசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியின் செயலலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இந்த நியமனத்தை இன்று(17.01) யாழ்ப்பாணம் கட்சி தலைமையகத்தில் வைத்து வழங்கினார்.
சபேசன் ஏற்கனவே தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளராகவும், இளைஞர் அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மாநகரசபை தேர்தலில் முழுமையான பலமான வேட்பாளர்களுடன் தமிழர் விடுதலை கூட்டணி களமிறங்கவுள்ளது எனவும், மாநகரசபை மூலம் வவுனியா நகரத்தினை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்ல விருப்புமுடையவர்கள் தேத்தலில் களமிறங்க தயாராகவுள்ளதாகவும், இந்த தேர்தலில் வவுனியா மாநகரசபையில் கடும் சவால் வழங்கும் கட்சியாக தாம் திகழ்வோம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழர் விடுதலை கூட்டணி, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மாத்திரமே போட்டியிடுவதாகவும், தேவையற்ற இடங்களில் போட்டியிட்டு வாக்குகளை உடைக்கும் பணியில் தாம் இறங்க மாட்டோம் எனவும், தமிழ் மக்களுக்காக தனியான பாதையில் அனைவருடனும் ஒற்றுமையாக பயணிப்பதே தமிழர் விடுதலை கூட்டணியின் நோக்கம் எனவும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் சபேசன் கருத்து கூறியுள்ளார்.
