இலங்கை கிரிக்கெட் உட்பட இலங்கையின் பல முக்கிய விளையாட்டு சங்கங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல ஊழல்கள், மோசடிகள் மற்றும் முறைகேடுகளுக்கு தண்டனை வழங்கப்படாமை தொடர்பில் விளையாட்டு அமைச்சில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குற்றங்களை மறைப்பதற்காக இலங்கை கிரிக்கெட் சபை பெருமளவு பணத்தை செலவு செய்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் ஆலோசகராக பணியாற்றும் சுதத் சந்திரசேகரவை கைக்குள் வைத்திருப்பதாக அந்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்ப்பதற்காக அவருக்கு இலங்கை கிரிக்கெட்ட்டினாள் ரூ. 100 லட்சத்துக்கும் மேல் கொடுக்கப்பட்டதாகவும், எனினும் போட்டிக்கு செல்லாமல், ஒதுக்கப்பட்ட பணத்தொகையை பயன்படுத்தியதாகவும் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இவ்வாறான சலுகைகளை பெற்றுக் கொண்டு, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் கிரிக்கெட் நிர்வாகக் குழுவைப் பாதுகாக்கும் நடைமுறையை அவர் பின்பற்றி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் செய்த நல்ல காரியங்களை தவறாக காட்ட முயற்சி!
1973 ஆம் ஆண்டு 25ம் இலக்க விளையாட்டுச் சட்டத்தில் விளையாட்டு அமைச்சர் சேர்த்த புதிய விதிமுறைகளை ‘தலைகீழாக’ மாற்ற நினைக்கும் இந்த ஆலோசகர், குசல சரோஜினி கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை காலதாமதம் செய்வதாக தெரியவந்துள்ளது.
இந்த குற்றச்செயல்கள் அனைத்தையும் கண்டும் காணாதது போல் விளையாட்டுத்துறை அமைச்சரும், தேசிய விளையாட்டுக் சங்கமும், நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை மேலும் கீழே கொண்டு சென்றுவிடும் என குறித்த ஊடகம் சுட்டி காட்டியுள்ளது.
எனவே விளையாட்டுத்துறை அமைச்சரால் விளையாட்டுத்துறை சட்டத்தில் செய்யப்பட்ட புதிய திருத்தங்களும், நன்மையான விடயங்களையும் தவறு என்று காட்டும் நடவடிக்கை இந்த ஆலோசகர் தற்போது செய்ய ஆரம்பித்துள்ளார்.
சுதத் சந்திரசேகர இதற்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக இருந்தவர் என்பதும், இவ்வாறான தவறான செயல்களில் ஈடுபட்டமைக்காக பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் அனைவரும் அறிந்த விடயமே. மேலும் இவர் தற்போது விளையாட்டு துறை அமைச்சரின் பெயரையும் கெடுத்து வருகிறார் என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
விளையாட்டுத்துறை அமைச்சரின் மனைவி, நாட்டிலுள்ள முக்கிய விளையாட்டு சபைகளில் பதவியிலிருப்போரின் மனைவியர் மற்றும் தேசிய விளையாட்டுத் தெரிவுக் குழுவின் தலைவர் சவேந்திர சில்வாவின் மனைவி மற்றும் மேலும் சிலர் அங்கத்துவம் வகிக்கும் மனைவிமார் சங்கம் ஒன்று இயங்கி வருவதாகவும், இந்த நாட்டில் விளையாட்டு வீரர்கள் சம்பாதித்த பணத்தை இவர்கள் இரக்கமில்லாமல் செலவு செய்வதாகவும் மேலும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனைவிமார் சங்கம் ஒன்றாக பயணங்களை மேற்கொள்வதாகவும், அதிசிறந்த விடுதிகளில் உணவருந்துவதாகவும், தெரியவந்துள்ளதுடன், இவ்வாறான செயற்பாடுகளால் இந்த நாட்டில் உள்ள விளையாட்டுதுறை அழித்துவிடும் என்பதை விளையாட்டுத்துறை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவர்களில் செயற்பாடுகளுக்கு, தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரும் ஆதரவளிப்பதாகவும் செய்திகள் பரவி வருவதுடன், இதற்க்கு அவர்கள் மௌனம் காப்பதும் சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.
விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த ஆலோசகரை இப்போது நீக்காவிட்டால், பாரிய இழப்புகளை அவர் சந்திக்க நேரிடும் என்பதை இனியாவது உணர்ந்துகொள்ள வேண்டும் என செய்தி வெளியிட்டுள்ள ஊடகம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.