கஞ்சா கலந்த சொக்லேட்களை தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆயுர்வேத திணைக்களத்தின் வைத்திய கலாநிதி பி.தரங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும்போது, கஞ்சா கலந்த சொக்லேட்டுகள் காதலர் தின சந்தைக்காக உருவாக்கப்பட்டதாகவும், சமூக வலைத்தளங்களில் அது விளம்பரப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆயுர்வேத திணைக்களத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி இந்த சொக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், காதலர் தினத்தை கொண்டாடும் இளைஞர்களை குறிவைத்து பல சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விடயங்களுக்கு, சமூக வலைத்தளங்கள் மூலம் ஆயுர்வேதப் பெயரைப் பயன்படுத்தி ஆயுர்வேதமற்ற மருந்தை விளம்பரப்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் நெறிமுறையற்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஆயுர்வேதத்தின் பெயரைக் குறிப்பிடும்போது கஞ்சா அடங்கிய உணவுப் பொருளை உற்பத்தி செய்வதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் முன் உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிதாக தயாரிக்கப்படும் மருந்து அல்லது உணவுக்கு ஆயுர்வேத திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்தாலும் கூட, “சூத்ரா குழுவில்” சமர்ப்பித்து மீண்டும் ஒப்புதல் பெற வேண்டும் அத்துடன், விளம்பரத்திற்கென்று மற்றொரு அனுமதி பெற வேண்டும், என சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஆயுர்வேதத்திற்கும் சொக்லேட்டுகளுக்கும் இடையே எந்தவொரு தொடர்பையும் நாங்கள் காணவில்லை. சொக்லேட்டை மருந்தாகப் பயன்படுத்துவதில்லை. எனவே, இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று ஆயுர்வேத திணைக்களத்தின் வைத்திய கலாநிதி பி.தரங்க தெரிவித்துள்ளார்.