இலங்கையில் பல பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் வகையில் சுற்றாடல் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, 2023 ஜூன் மாதம் 01ம் திகதி முதல் இலங்கையில் பின்வரும் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை மற்றும் பாவனை தடை செய்யப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் மற்றும் பிளாஸ்டிக் யோகட் கரண்டிகள், தட்டுகள், கோப்பைகள் (தயிர் கோப்பைகள் தவிர), கத்திகள், மற்றும் முட்கரண்டிகள், பிளாஸ்டிக் மலர் மாலைகள், பிளாஸ்டிக் இடியாப்ப தட்டுகள்
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான அனுமதி கோரி 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை ஆராய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
