ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பலர் கட்சி தாவல் மேற்கொள்ளவுள்ளதாக ஏற்கனவே தாவி அமைச்சு பதவியினை பெற்றுக் கொண்ட சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கூறியுள்ளார்.
தான் பதவியினை பெற்றுக் கொண்ட வேளையில் பலர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி வர தயாராக இருந்த போதும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தியினை உடைக்க வேண்டாம் என கூறினார். ஆனால் அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது. வரவுள்ளவர்களை ஏற்றுக்கொள்ளுமாறும் அண்மையில் ஹிக்கடுவையில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதியிடம் தான் இதனை கூறியதாகவும் ஹரின் மேலும் கூறியுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது டிசம்பர் மாதம் வரும் வரை செல்லுமெனவும், அதுவரை ஜனாதிபத்திக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தான் கட்சி மாறவில்லை எனவும் நாட்டின் தேவை கருதி அமைச்சு பதவியினை எடுத்துக்கொணடதாகவுமே ஆரம்பத்தில் கூறியிருந்தார். ஆனால் அவர் இப்போது வெளியிட்டுள்ள கருத்தின் அடிப்படையில் கட்சி தாவலை மேற்கொண்டுள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.