வெடுக்குநாரி சிலை உடைப்பு – கறுப்புநிற காரில் வந்தவர்கள் மீது பொலிஸார் சந்தேகம்!

வவுனியா வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று(30.03) வவுனியாவில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இந்த விசமச்செயலை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆலயத்தின் நிர்வாகத்தின் ஏற்ப்பாட்டில் குறித்த எதிர்ப்புப்பேரணி இடம்பெற்றது.

காலை 9.30 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயவளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி,மணிக்கூட்டு சந்தியை அடைந்து கடைவீதி வழியாக, A 9 வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்டசெயலகம் வரை சென்றடைந்தது. அங்கு மாவட்ட செயலாளருக்கு கோரிக்கை மனு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் வடக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகைதந்திருந்ததுடன், பொதுஅமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமயப்பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைகழக மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்
காணாமல்போன உறவுகளின் சங்கம், என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த சிலர் ஊடங்களுக்கு கருத்துக்கள் தெரிவிப்பதிலும், புகைபபடங்களை எடுப்பத்த்திலும் அதிக அக்கரையாக செயற்பட்டதாகவும், போராட்டத்தை பற்றி பெரியளவில் கணக்கிலெடுத்துக்கொள்ளவில்லை என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

போராட்டம் ஒரு புறமாக நடைபெற்ற வேளையில், மறுபக்கமாக இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியா, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து வீசப்பட்டமை தொடர்பில் குறித்த ஆலய பகுதிக்கு கறுப்பு நிற காரில் வந்தவர்கள் இந்த சம்பவத்தை செய்திருக்கலாமென பொலிஸார் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளனர். காரின் இலக்க தகடுகள் கண்காணிப்பு கமராவில் தெளிவில்லாமல் காணப்படுவதனால், தொலைபேசி சமிக்ஞை விபரங்களை பெற நெடுங்கேணி பொலிசார் வவுனியா நீதவான் நீதிமன்றில் இன்று (30.03) கோரிக்கை மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா மாவாட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) நீதிமன்றத்தில் முன்னிலையாகி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நீதிமன்றத்தில் விசாரணைகளின் போது குறித்த மன்றில் இருந்த சட்டத்தரணி திருச்செல்வம் திருவருள் தலைமையிலான சட்டத்தரணிகளான சபீஸ், சியாத், திபின்சன், கேதீஸ்வரன், மதுஞ்சளா, நிவிதா, ஜிதர்சன், இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

விக்கிரகங்களை உடைத்தமை தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்யப்பட வேண்டும் எனவும், அதற்கு மன்று உத்தரவு இட வேண்டும் சட்டத்தரணிகள் கோரிக்கை முன்வைத்தனர்.

சட்டத்தரணிகளின் கோரிக்கையை ஏற்ற வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதி சுபாசினி தேவராசா உடனடியாக விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு, எதிர்வரும் 10 திகதி மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், குற்றவாளிகளை கைது செய்யுமாறும் உத்தரவிட்டார்.

வெடுக்குநாரி சிலை உடைப்பு - கறுப்புநிற காரில் வந்தவர்கள் மீது பொலிஸார் சந்தேகம்!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version