சென்னை அணி தோல்வியுடன் IPL ஐ ஆரம்பித்தது.

சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (31.03) அஹமபாத்தில் IPL 2023 இன் முதற் போட்டி நடைபெற்றது. நடப்பு சம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினை 4 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ருத்ராஜ் கெய்க்வாட்டின் அதிரடியான துடுப்பாட்டத்தில் மூலம் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றது. தோணி இறுதி ஓவரில் வழமை போலவே தனது அதிரடியான துடுப்பாட்டத்தினை வெளிக்காட்டினார். இருப்பினும் அவர் சற்று முன்னதாகவே துடுப்பாட்டத்துக்கு களமிறங்கியிருந்தால் சென்னை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தக் கூடிய வாய்ப்பு காணப்பட்டது. பந்துவீச்சாளர்களுக்கான இடத்திலேயே துடுப்பாட இறங்கினார். சென்னை அணியின் துடுப்பாட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் 92(50) ஓட்டங்களையும், மொயின் அலி 23(17) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அல்சாரி ஜோசப், ரஷீத் கான், மொஹமட் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டினை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. சுப்மன் கில் 63(36) ஓட்டங்களை பெற்று நல்ல ஆரம்பத்தை வழங்கினார். ரிதிமன் ஷஹா அவருடன் நல்ல ஆரம்பத்தை வழங்கி 25(16) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மத்திய வரிசையின் சராசரியான துடுப்பாட்டம் குஜராத் அணிக்கு வெற்றியினை இலகுபடுத்தியது. விஜய் சங்கர் 27(21) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

குஜராத் அணிக்காக தனது முதற் போட்டியில் களமிறங்கிய கேன் வில்லியம்சன் முழங்கால் உபாதை காரணமாக களத்தடுப்பின் 13 ஆவது ஓவரில் மைதானத்தை விட்டு வெளியேறினார். IPL போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளது.

இன்று(01.04) பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி முதற் போட்டியாகவும், லக்னோ சுப்பர் ஜியன்ஸ்ட்ஸ் மற்றும் டெல்லி கப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இரண்டாவது போட்டியாகவும் நடைபெறவுள்ளன.

சென்னை அணி தோல்வியுடன் IPL ஐ ஆரம்பித்தது.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version