ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினை 5 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றியினை பதிவு செய்துள்ளது. 4 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பஞ்சாப் அணி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் ஷிகார் தவான் 86(56) ஓட்டங்களையும், அவருடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 60(34) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 90 ஓட்டங்கள். ஷிகார் தவான் அடித்த வேகமான அடி மறுபுறத்தில் காணப்பட்ட பானுக்க ராஜபக்ஷவினது கையை பதம் பார்க்க அவர் 01 ஓட்டத்தோடு துடுப்பாட முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்களையும், அஷ்வின், ஷெஹால் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்,
பதிலுக்கு துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் சஞ்சு சம்சன் 42(26) ஓட்டங்களை பெற இறுதி நேரத்தில் சிம்ரோன் ஹெட்மயர் 36(18) ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் நேதன் எலிஸ் 4 விக்கெட்களை கைப்பற்றி போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதற் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இந்தப் போட்டியில் தோல்வியினை தழுவியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி 4 புள்ளிகளோடு முதலிடத்தில் காணப்படுகிறது.
இன்று கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களுர் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
