சிறுவர் துஸ்பிரயோகத்துக்கு எதிராக கடும் தண்டனை.

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டத்தை உருவாக்குமாறு சட்டத் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஒரு சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை விரைவாக தடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டக் கட்டமைப்பு ஒன்றின் அவசியத்தையும்வலியுறுத்தியுள்ளார்.

களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், களுத்துறை தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றமை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கினார்.

நாட்டின் குழந்தைகளை பாதுகாப்பதற்கு தனியான சட்டமொன்றை கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அதற்காக தற்போதுள்ள சட்டங்களைத் திருத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த சட்டக் கட்டமைப்பை தயாரிக்கும்போது, கையடக்கத்தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை பயன்படுத்தி சிறுவர் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, உரிய சட்டங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் அவை துரிதமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

பாடசாலை பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெற்றோர்-பிள்ளை உறவுகள் குறித்தும், வீட்டுச்சூழலில் மனநலம் தொடர்பான புதிய கருத்தாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

சிறுவர் சந்ததியினரைப் பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்களைக் கொண்டுவரும் அதேவேளையில், பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு பரந்த மனப்பான்மை கொண்ட பிள்ளையை உருவாக்குவதற்கும் சமூகத்தின் மனப்பாங்கை வளர்ப்பதற்கு அரச மற்றும் தனியார் நிறுவன மட்டத்தில் தனியான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version