கேகாலை மாவட்டம், தெரணியகலை, கெஹெல்வல தனியார் தோட்டத்தில் வசித்து வரும் 33 வயதான ஆண் ஒருவர் கடந்த 8 ஆம் திகதி மிகவும் மோசமான முறையில் பொலிசாரால் தாக்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளரும், கேகாலை மாவட்ட அமைப்பாளருமான முருகேசு பரணீதரன் வி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற சம்பவம் தொடரில் கீழ்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
கடும் தாக்குதலுக்குள்ளான ஜெயசீலன் எனும் மூன்று பிள்ளைகளின் தகப்பனாகிய குறித்த நபர் வசித்து வரும் தோட்டத்தில் இடம்பெற்ற திருட்டு சம்மந்தமான விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அவ்வாறு அழைத்து செல்லப்பட்ட நபர், ஒரு நாள் முழுவதும் பொலிசாரின் தங்குமிட பகுதியில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட அதேவேளை, சிகரெட்டினால் சுடப்பட்டுமுள்ளார்.
தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக மயக்கமடைந்த நபரை பொலிஸார் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் யாருக்கும் சொல்லக்கூடாது என அச்சுறுத்தி வீட்டில் விட்டுள்ளனர்.
வீட்டுக்கு சென்ற நபரின் உடல் மோசமாக பாதிக்கப்பட்டதோடு, பச்சை நிற வாந்தி எடுத்தனை தொடர்ந்து, அவரின் மனைவி பொலிசாருக்கு அறிவித்த நிலையில், அவரை பொலிஸார் வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலமாக அழைத்து சென்றுள்ளனர்.
இருப்பினும் பொலிசாரால் தாக்கியதாக சொல்ல கூடாது. மரத்தில் இருந்து விழுந்ததாக கூறுமாறு மீண்டும் அச்சுறுத்தி தெரணியகலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளளனர். பாதிப்புக்குள்ளான நபரும் அவ்வாறே வைத்தியசாலையில் கூறியுள்ளார்.
தெரணியகலை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்க முடியாத நிலையில் அவர், கரவனல்ல
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள், அவர் மரத்தினால் விழவில்லை என்பதனையும், தாக்கப்பட்டுள்ளார் என்பதனையும் இனங்கண்டு விசாரித்த வேளையில் உணமையினை ஜெயசீலன் கூறியுள்ளார்.
கரவனல்ல வைத்தியசாலையில், அவருக்கு சிகிச்சையளிக்க முடியாத நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நடைபெற்ற சம்பவம் தொடர்பில் ஜெயசீலனின் மனைவி அவிசாவளை பொலிஸ் அத்தியட்சகர் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
நடைபெற்ற சமயம் தொடர்பில் பரணீதரனுக்கு, பாதிக்கபப்ட்ட நபரின் உறவினர்கள் தெரியப்படுத்தியதனை தொடர்ந்து, அவரது உறவினர்களை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனிடம், பரணீதரன் அழைத்து சென்று நடந்த விடயங்களை தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மனோ கணேசன் தெரணியகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டாரவை தொடர்பு கொண்டு விசாரித்த போது குறித்த சம்பம் நடைபெற்றதனை உறுதி செய்துள்ளதோடு, விசாரணைகள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த விடயம் தொடர்பில் சீதாவாக்கை பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்து விசாரணைகளை உடனடியாக நாடாத்துமாறு மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளார். அத்துடன் கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கும் குறித்த நபர் தொடர்பில் அக்கறை எடுக்குமாறும் மனோ கணேசன் அறிவித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளரும், கேகாலை மாவட்ட அமைப்பாளருமான முருகேசு பரணீதரன் வி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.