சகல பிள்ளைகளுக்கும் கல்வியில் சமவுரிமை பெற்றுக்கொடுப்பேன் – சஜித்

கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அதை அடிப்படை உரிமையாக மாற்றுவோம்.இதனால் எழும் சமூக அநீதிக்கும் முற்றுப்புள்ளி வைப்போம் என மொனராகலையில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சகல பிள்ளைகளுக்கும் கல்வியில் சம உரிமை பெற்றுக்கொடுப்பதே ஐக்கிய மக்கள் சக்தியினதும் தனதும் ஒரே நோக்கமாகும் எனவும்,அது ஓர் மனித உரிமை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாட்டின் அடிப்படை சட்டத்தில் கல்வி பற்றி குறிப்பிடப்படவில்லை என்றாலும் தான் நாட்டின் ஜனாதிபதியான பிறகு, இந்நாட்டில் கல்வி உரிமையை அடிப்படை உரிமையாக மாற்றுவதாகவும் பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 31 ஆவது கட்டமாக ஸ்மார்ட் வகுப்பறைக்கான நவீன கற்பித்தல் உபகரணங்களை மொனராகலை கும்புக்கன பஞ்சானந்த மகா வித்தியாலயத்திற்கு வழங்கும் நிகழ்வில் இன்று(14.06) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

கல்வி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றாலும்,கல்வியில் கடுமையான வேறுபாடுகளும்,
ஏற்றத்தாழ்வுகளும் நிலவுவதாகவும், நாட்டில் வசதி வாய்ப்புகள் மற்றும் வளங்கள் குறைபாடுகள் ரீதியாக பாடசாலைகளுக்கு மத்தியில் இருந்து வரும் பிரிவினையும், சமத்துவமின்மையும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும், இந்த ஏற்றத்தாழ்வால் சமூக அநீதி தோன்றுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தல் நலன்களைப் பெற்றுக் கொள்ளவும், அரசியல் நலன்களை ஈட்டிக்கொள்ளவும் இந்த சமூக அநீதி என்ற வசனமே பிரயோகிக்கப்படுவதாகவும், இந்த சமூக அநீதியை இல்லாதொழிக்க பெரும் பதவிகளில் இருக்கும் நபர்களுக்கு எத்தகைய தேவையும் இல்லாதது போல் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தலைநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகள் சமமாக கவனிப்புக்குட்பட வேண்டும் என்ற போதிலும், தேர்தலுக்காக சிங்களம் மட்டும் என்று கூறும் ஒரு தரப்பால் இந்த ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளதாகவும், இந்நிலை மாற்றப்பட்டு ஒவ்வொரு பாடசாலையிலும் ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்ப அறிவியல் போன்றவற்றை கற்பித்து ஸ்மார்ட் குடிமகனை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இப்பாடசாலைக்கு காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட 2 ஏக்கர் காணி, பிரதேச அரசியல்வாதியொருவரினால் சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதான தகவல் பாடசாலை நிர்வாகத்தினரால் எதிர்க்கட்சித் தலைவரிடம் இதன் போது வெளிக்கொணரப்பட்டது.

பாராளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பமான ஒரு நாளில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுடன் இணைந்து இந்த அநீதிக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் வாக்குறுதியளித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version