2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முக்கிய 09 போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளன. இந்த அறிவிப்பை இன்று(15.06) ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா அணி விளையாடுவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதன் காரணமாக இரண்டு நாடுகளில் போட்டியை நடத்துவதற்கான முன்மொழிவை ஏற்பாடு நாடான பாகிஸ்தான் முன் மொழிந்தது. அதற்கு ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் இந்தியா அணி விளையாடும் முதல் சுற்றுப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளன. பாக்கிஸ்தானில் முதல் சுற்று போட்டிகள் நான்கு நடைபெறவுள்ளன. இரண்டாம் கட்ட போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி ஆகியன இலங்கையில் நடைபெறவுள்ளன.
ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி ஆரம்பிக்கும் இந்த தொடர் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் ஆகிய அணிகள் ஒரு குழுவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் மற்றைய குழுவிலும் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதலிரு இடங்களை பெறும் அணிகள் சுப்பர் 04 சுற்றுக்கு தகுதி பெறும். நான்கு அணிகள் முதலிரு இடங்களை பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இம்முறை ஆசிய கிண்ணம் 50 ஓவர்கள் அடங்கிய போட்டியாக நடைபெறவுள்ளது.
ஹம்பாந்த்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானம் அல்லது காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கையின் போட்டிகள் நடைபெறும் வாய்ப்புகள் உளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த விடயங்கள் உறுதி செய்யப்படவில்லை.